புதியன புகுத்தாதே இறைவா - என்னுள்
பழையன கழிக்காதே.
கழியும் நெருக்கம் அல்லவே அது.
இந்த குறிஞ்சியையும்
அந்த மருதத்தையும்
நீதானே இணைத்தாய் - என்னுள்
குறிஞ்சிப் பூவை வித்தாய்.
அந்த முதுவேனிற் காலத் தொடக்கத்தில்
ஒரு பகற்பொழுதின் முதற்கூற்றில்
இதயத்தில் கனிவேயில்லாது - எங்களை
சந்திக்க வைத்தாயே.
பார்த்தவுடன் பற்றிக்கொண்டோமே
நாங்களாகவா செய்தோம்.
உன்னால் தானே.
படிப்பில் நான் நாட்டம் கொள்ளாததில்
அவனுக்கென்ன நோட்டம்.
மலைச் சரிவில் இறங்கும் போது
கால் சறுக்குவது இயல்புதானே - என்
மார்புச் சேலை விலகுவதாய்ச் சொல்லி
“பின்” செருக இவனுக்கு
எப்படி வந்தது தைரியம்.
நீதானே கொடுத்திருந்தாய்?
ஒற்றையாய், ஊர்க்குருவியாய், ஓர்
போர்க்குருவியாய் சுற்றித் திரிந்த என்னை,
ரோஜா இதழ்களாய் என் இதழ் கொண்டு
அதில் முட்களை மட்டுமே வார்த்தையாய்க் கொண்ட
என்னை - அவனாகவேயா அடக்கினான்.
நீதானே அவனுள் புகுந்து ஆட்டினாய்.
குதிகாலுக்கும் கெண்டைக்காலுக்கும் நடுவேயாய்
உயர்ந்திருந்த என் உடை
ஒரே வாரத்தில் - தரை கூட்ட
நீண்டுவிட்ட மாயமென்ன.
அவனுள் ஆடிய நீ
என்னுள்ளும் ஆடியது தானே.
வாய் மொழியே இல்லாமல்
உள்ளார்ந்த அன்பினால்
விழியாலே மொழி பேசி - எனை
பைத்தியமாக்கிவிட்டு - அதற்கு
அவனையே வைத்தியனாக்கிவிட்டு
என்னையும் ஆட்டுவித்தாயே.
முட்டை ஓட்டு உலகில் நுழைத்து
அதன் விட்டம் தொடுவதையே - ஏதோ
உயரே உயரே அண்ட சராசரங்களையும் அளப்பதாய்
எங்களை பாவிக்க வைத்தது
நீயா? அவனா?
இருவரும் ஒன்றாகி, அதுவும் அரையாகி
நெருக்கத்தின் கதகதப்பில் - உன்னிடம்
தவமிருந்து பெற்றது மட்டுமென்ன
சாகும் வரை சாகாவரம் தானே.
காதல் மழையில் நனைந்திருந்தால்
பிழைத்திருப்போமோ என்னவோ.
காதல் சாரலில் நனைந்ததுதான் தவறு.
சளி பிடித்துக் கொண்டது போல் - அவனை
கிலி பிடித்துக் கொன்றதுவோ?
யாமத்தில் தோன்றுவதை விடுத்து
காமத்தின் மிகுதியால்
மாலையென்றோ, ஏற்பாடென்றோ,
வைகறையென்றோ பாராமல்
ஞாயிற்றைத் தேடியலையும் மதியைப் போல
ஞாலம் முழுதும் தேடுகின்றேன் அவனை.
தேனும், தினைமாவும், வள்ளிக்கிழங்கும் வைத்துக்கொண்டு
தேடித் தேடிப் பார்க்கிறேன்.
உன்னால் தானே இதெல்லாம்.
அங்கஹீனற்களுக்கும் மனதில் வளு இருக்கும்.
என் மனமே இங்கு ஊனமாகிவிட்டதே.
அங்கம் எப்படி வளுவாய் இருக்கும்.
எங்கள் நெருக்கத்தை முறுக்கிட்டு
கிறக்கத்தில் விட்டாயே - இன்றேன்
உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாய்?
இந்தக் குறிஞ்சிப் பூ
மீண்டும் பூத்தாலும் அவனுக்காகவே பூக்கும்.
மற்றுமொரு புதிய காயத்தை
ஏற்படுத்த - என்னுள்
விதை விதைக்காதே.
அன்றைய காயத்தின் மாயத்தால்
தோன்றிய இனிய வடு
இன்னமும்
என்னுள் தானே இருக்கிறது.
மனமே ஊனமாகி
அங்கமும் வளு குன்றினாலும்
அன்றைய எங்கள் கானமே
போதும் எனக்கு.
இன்றைய என் சுருக்கங்கள் கூட என் தோலில் தான்.
இதயத்தில் இல்லை.
வெளுத்துப் போனதும் கூட என் கேசம் தான்.
என் நேசம் இல்லை.
இன்றோ, நாளையோ நிச்சயம் அவன் வருவான்.
அதனால்
புதியன புகுத்தாதே இறைவா - என்னுள்
பழையன கழிக்காதே.
No comments:
Post a Comment