Thursday, April 3, 2008

முற்றுப் பெறாத முதுமை...

நீயே தானா இது.
எப்படிப் பெண்ணே எப்படி...

காற்றில் அலைந்து கலையும் - கருத்த
உன் பட்டுக் கூந்தல் - இன்று
வெளுத்து, வறண்டு, வெடித்து...

எனக்குப் பிடிக்கும் வண்ணத்திலேயே,
வடிவத்திலேயே வகைவகையாய் வலம்வந்த
உன் நெற்றியில் - இன்று ஏனோதானோவாய்
குங்குமத்தீற்றல்...

ஜாலம் காட்டும் கருவிழிகளும், அதன் இமைத் தூரிகைகளும்
மாயமாய் மறைந்து போய் - இன்று
இமைகள் கூட நரைத்துப் போய்...

எங்கே... எங்கே... எங்கே போயின அவை.
என்னையே சுவாசித்த உன் நாசியும்,
என் இதழ்பட்ட உன் கண்ணங்களும்,
என் கண்ணம் தொட்ட உன் இதழ்களும்,
இன்னமும் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும்
உன் கொலுசொலியின் பாதங்களும்
எங்கேதான் போயின...

விழிகள் காட்டும் காட்சிகளை - என்
மனதின் மொழிகள் மறுக்கின்றன...

எனக்குள் இருக்கும் உன் இளமையே
இன்னமும் முற்றுப்பெறாத போது - என்
முதுமை எங்கே முற்றுப் பெற...

No comments: