நிஜம் கூட நிழலாகும் பெண்ணே
நான்
உன்பால்
காதல் கொண்டால்.
வழி பார்த்திருப்பேன்,
காத்திருப்பேன்,
விழி பூத்திருப்பேன்,
வேர்த்திருப்பேன், - உனை
எதிர்பார்த்திருப்பேன்.
நீ காத தூரம் சென்றபின்னே
உன் பாதமலர் பட்டுச் சென்ற - உன்
வாசம் மட்டும் விட்டுச் சென்ற
பாதை வழி பார்த்திருப்பேன்.
நெளிந்த நறுங்கூந்தல் சல்லடையில்
நுழைந்த காற்றை நீ சலித்தனுப்ப
கழிந்த காற்றின் வாசனையை
மகிழ்ந்து நுகர - நான்
காத்திருப்பேன்
சுண்டும் விழி ரத்தினத்தில்
சுற்றும் அதன் ராட்டினத்தில்
சுற்றிப் பாராத பட்டணத்தை
சுற்றிப் பார்க்க
விழி பூத்திருப்பேன்.
நடு பகல் நாயகனின்
நங்கூர நாழிகையில்
நாவற்பழம் உலுக்கிவர நாயகி நீ சென்றுவிட
நான் இங்கே
வேர்த்திருப்பேன்.
கொஞ்சமாய் நீர் தெளித்து
கோலமிட நீ வாசல் வர - கொஞ்சும் உன்
கொலுசொலிக்கு
கொஞ்சம் நான்
எதிர்பார்த்திருப்பேன்.
இந்த
நிழல் கூட நிஜமாகும் பெண்ணே
நீயும்
என்பால்
காதல் கொண்டால்…
No comments:
Post a Comment