Sunday, June 26, 2011

ஜெயித்தலும் ஜெயித்தல் நிமித்தமும்...

கண்ணுறங்கிப் போய்விட்டீரோ
கடவுளர்கள் அனைவரும்.

வருடா வருடம் வரும் ஆடி தானேவென்று
வக்கணையாய் உறங்கிவிட்டீரோ.

வாரா வாரம் வரும் வெள்ளிதானேயென்று
வசதியாய் துயில் கொண்டீரோ.

தினந்தோறும் வரும் நாங்கள் தானேவென்று
திரும்பிப் படுத்திட்டீரோ.

நிஜமாய்த் தான் உறங்கினீரோ - இல்லை
உறங்கியதாய் நடித்தீரோ.

மன்னின் மைந்தர் எமக்கு
வெல்லும் சக்தியே
நீர் தான் என்றி ருந்தோமே -
எமைக் கொல்லும் புத்தியும்
நீர் கொண்டி ருந்தீரோ.

கல்லாய் நினைத்த மனிதர்களும் - இன்று
மண்ணாய் கரைந் துருகுகின்றாரே - உமை
எங்கள் நிழலாய் நினைத்தி ருந்தோமே - நீரேன்
எம்மைத் தனலாய்த் தகித்து எரித்து விட்டீர்.

நிஜமாய் நீர்தான் கல் லென்றால் - எம்
சோகம் உன்னிட மேன்
சொல்ல வேண்டும்.

ஒரு நாளும் உமைக் கானாதில்லையே
பாதகத்தி பெத்த மக்கள்.
ஒரு தொழிலும் உமைத் தொழாமல்
தொடங்கியதி ல்லையே.

தரும மிகு தலையாடியை
உம்மி லிருந்து தொடங்கப்போய் -
எம் விழுது அவிந்து போயிற்றே.

உமக்கு
விளக்கு வைத்து வேண்டியவர்கள் - இன்று
வயிறெ ரிந்து விளக்கம் கேட்கிறோம்.

எத்தனை ஆலயம் ஏறியிருப்போம்
எத்தனை கடவுளர் தொழுதிருப்போம்
எம் நாடி அறுந்து வீழ்ந்திடவா
உள் நாக்கிலே அலகு குத்தினோம்?

ஒரு மாதமாய் விரதமிருந்து
வெறுங் கைகளில்
வெஞ் சட்டி எடுத்து
தீ கனிந்த பூங் குண்டத்தில்
கால் புதைய இறங்கினோமே –
எம் உயிர் நிலையில்
தீ பொதிந்து அழுத்திடவா?

உம் சூதும் வாதும்
நாங்களேணும் புரிந் திடுவோம் -
பாவம் பிஞ்சுகள் -
அதுங்க ளென்ன அறிந்திடும்?

காட்டு வேலைக்கா போயின – செல்லங்கள்
ஏட்டில் கற்கத் தானே சென்றன.

விஜயதசமியில் கல்வி விதைத்து விட்டால்
விருட்சமாய் விளையுமெ அறிவு என்று
நோம்பி கண்டு சேர்த்தோமே – எம்
ஆவி சுண்டிப் போச்சுதுவே.

தனித்த தோர்
உலக மய்யா அவர்களது
நிச்சயமாய் இருந்தோ மில்லை நீரும் நானும் -
அவர்களது பூமியில்.

ஆட்டமும், பாட்டு மாய்,
கூச்சலும், குமமாளமு மாய்,
அழுகை யூடே உறக்கமு மாய்,
விளையாட் டூடே கற்றலு மாய்,
சரி விகிதம் கலந் திருக்கு – மாயினும்
உம் சூதும் எம் சூதும்
கிஞ்சித்தும் பெற்றா ரில்லை.

சத்தியம் பகலுவேன் கேள்.
தீ பட்ட காயமென்ன – ஒரு
கல் பட்ட காயம் கூட – எம் செல்லம்
உடல் கண்டதில்லை.

பூ மனது க்காரி யைய்யா – எம் தங்கம்
பூங் கொத்து சர மைய்யா – ஒரு
புழு பூச்சியை அடித்தவளி ல்லை – ஒரு
பட்டுப் பூச்சியை பிடித்தவளி ல்லை.
பார்த்து மட்டும் ரசித் திருப்பாள் - அதை
பிடித்து வதைத்துக் காண்டாளில்லை – நின் போல்
எரித்து சிதைத்தும் கொன்றா ளில்லை.

ஐந்தே நாள் பள்ளி சென்றதும்
அம்மா, அப்பா எழுதினாளே...
ஐந்தும் ஐந்தும் பத் தென்றாள் -
குளத்தி னுள்ளே வாத் தென்றாள்.
புத்தகத்தில் பொம்மை கண்டு
பேர் விட்டுக் கூப்பிடுவாள் -
கொஞ்சிப் பேசிடும் பிஞ்சின் வாயில்
கொள்ளி செருகவும் துணிந்திடுவீரோ?

கற்பூர புத்திக்ககாரி – எம் செல்லம்
கண்டாரிடம் தொற்றிக் கொள்வாள்.
எல்.கே.ஜி – யே படித்தாலும்
எட்டூர் சிநேகிதம் சேர்ததுக் கொள்வாள்.

அவள் சேர்த்த சிநேகித மெல்லாம்
நான் சேர்த் திருந்தே னில்லை –
நிச்சயமாய் அவளோடு – நீர்
சேர்த்தி யேயில்லை.

அட்டை போட்ட புத்தகத்தை
அழகழகாய் அடுக்கி வைப்பாள்.
அடுத்த தின வீட்டுப் பாடம்
அன்றைக்கே முடித்து வைப்பாள்.

குதியாட்டம் போட்டாலும்,
குறுங் குசும்பு செய்தாலும் - யாரும்
குற்றஞ் சொல்லச் செய்தா ளில்லை – நின் போல்
குந்தகம் விதைக்கக் கற்றா ளில்லை.

ஒற்றை ரோஜா வாங்கிக் கொடுத்தால்
ஒப்புக்காது எம் ராஜாத்திக்கு.
மூன்று சேர்த்து வாங்கினால் தான்
முகமெல்லாம் கெழுத்தி யாகும்.

தனக்கும், சிநேகிதிக்கும் எடுத்தது போக
ஆசிரியைக்கு ஒன்று கொடுத்து,
மீதி யொன்றை உமக்கு வைப்பாளே – அவளைக்
கருக்கும் போதும் நுகரவில்லையா நீர் -
ரோஜாத் தோட்ட வாசம்.

தனித்து உண்டறியாதவள் - எம் மயில்குஞ்சு
வீட்டில் உண்ணும் போதும்
ஒரு பிசுக்கு எமக்குண்டு.
பள்ளியில் உண்ணும் போதோ
எல்லோர் பிசுக்கும் இவளுக்குண்டு.
நாராசமாய் நசுக்கிக் கொன்றீரே – சத்தியம் சொல்லும்
அவள் பிசுக்குண்டதில்லையா நீர்.

யார் கற்ற இலக்கியமும் - அவள்
இளஞ் சொல்லில் இளைத்துப்போகும்.
யார் கற்ற ஆங்கிலமும் - அவள்
உச்சரிப்பில் ஆடிப் போகும் - அவளின்
ஷேம், ஷேம் பப்பி ஷேமி-ல்
இன்னமும் நீர் சாகவில்லையா?

விடிந்தால் தலையாடி யென்று
ஊர் சனமே கூத்தடித்தது.
ஆடிப் பெருக்கின் பெருமை சொல்லி
பதிணெட்டாம் போர்க்களத்து கதைக் சொல்லி
முன் தின நாள் தூங்கவைத்தேன்.

எம் குடும்பம், அவர் குடும்ப மென் றில்லாமல்
ஓட்டுமொத்த ஊர் சனத்துக்கும்
கொள்ளி வைக்க – உக்கிரமாய்
விடிய வைத்தீரோ – அந்த
சிகப்பு பூசிய வெள்ளியை.

தலைக்கு முழுகி விட்டு,
சடை நிறைய பூ வைத்து,
நெற்றி நிறைய விபூதி யிட்டு
உன்னைத் தானே
சேவித்துத் தொலைத்தாள் முதலில்.

பள்ளிக்குப் போன மகளை
பாடையில் தான் பார்ப்பே னென்று
நேற்றிரவே கண்டி ருந்தால்
கொஞ்சூண்டு நஞ்செ டுத்து – எம்
நாக் கடியில் வைத்துக் கொண்டு – அவள்
பூம் பிஞ்சு வாய்க் குள்ளே – ஒரு
பிசுக் கெடுத்து தினித்துவிட்டு
வலி தெரியாமல் செத்திருப்போமே...

ஐயகோ...

வெதும்ப வைத்த தண்ணீரையும்
சில் லாக்கிக் குளிப்பாளே...
வெள்ளரியாய் வெடித் திருந்தாள ய்யா – பாவி மகள்
மடங்கிப் போய் விறைத் திருந்தாள ய்யா...

கொண்டு போன தூக்குப்போனியைத்
தவறவிட்டால் நான் பேசுவே னோன்னு
வெந்து போன விரலுக்குள்ளே
விவரமாகத் திணிச்சிருந்தாளே...

ஊரு முழுக்கவும் புகைதான் னாலும்
அவள் காதுக்குள்ளேயும் புகையைக் கண்டேன் - என்
ஈரக் குலையும் அக்கக் கண்டேன்.

எல்லாம் கண்டேன்...
எல்லாம் கண்டேன்...
ஐயோ...

அவள் சிரம் பெரிதாய் ஊதக் கண்டேன்...
அழகுக் கண்கள் அவியக் கண்டேன்...
செப்பு இதழ்கள் கறுகிக் கண்டேன்...
குட்டிக் கைகள் குறுகிக் கண்டேன்...
சின்ன இடை சிதைந்து கண்டேன்...
பிஞ்சுப் பாதங்கள் பழுக்கக் கண்டேன்... – ஐயோ
அவள் செத்து பார்த்தும் - நான்
சாகாமல் செத்து நின்றேனே...

மலரைக் கசக்கும் மந்தியாய்
மதியின் போக்கில் விரைந்து –
மலராத எம் மொட்டுக்களையும்
சிதைத்து விட்டீரே –
யார் மீதான கோபமிது?

நெறி காணாத எம் மக்கள் கூட
வெறி தீராத போர்க்களம் புகினும்
இளம் மொக்குகளையும், பூவையரையும்
தவிர்த்தே வெல்வர்.

போர்க்களத்தின் நெறி கூறிய
வேத ஞான மூர்த்தியே – நீரேன்
மொக்குகளாய்த் தேடிக்
கொன்றீர்.

முடி பொசுங்க, உடல் பொசுங்க
துள்ளத் துடிக்கக்
கொன்றிருக் கின்றீரே - இந்த
நாசகார ரௌத்திரம்
உம்மிலிருந்தா வந்தது?

அசுர வம்சத்துப் பிறப்புதானோ நீவிரும்...

யாரை தேடிய போராட்டம் - இது
எந்த வெற்றிக்கான வெள்ளோட்டம்?

இத்தனை வண் கொடுமை செய்தீராயினும்
ஜெயிக்க முடிந்ததா எம் செல்லம்மாவை...

உம்மைப்போ லில்லை
ஜெயிக்கப் பிறந்தவள் - அவள்.
எதிலும் முதலிடம் வேண்டும் அவளுக்கு.
பாடத்திலும் சரி, பாடையிலும் சரி.

உம் பிடியிலிருந்து தப்ப நினைத்தால்
துளியும் சேதமில்லாது வந்திருப்பாள்.
நண்பர்கள் கதறல் கேட்டிருக் கின்றாள் - உம்
கோரக் குதறல் கண்டிருக் கின்றாள் - துணிந்து உம்
வெப்பம் குடைந்து முன்னேறி – சிநேகிதர்கள்
மொத்த பேரையும் போர்திக் கொண்டாள்...

கண்டீரோ? இல்லையா?

கறுகிப் போன கட்டைகளாய்
பொசுங்கிக் கிடந்த அந்த மாணிக்கங்களை.

பாடசாலையின் மூலையிலே
மரக்கட்டைகளோடு கட்டைகளாய்
குவிந்திருந்த சதைக் கட்டைகளில்
எனது கட்டைதானே மேலேயிருந்தது...
ஏனைய கட்டைகளின் பிசுக்குகளை
எனது கட்டைதானே மறைத்திருந்தது...

இறப்பிலும் இறுதியில் வெற்றி கொண்டாள் - உயிர்
துறப்பிலும் முதண்மையாய் இறுத்திக் கொண்டாள்.

ஈன்ற பொழுதினும் பெறிதுவக் கின்றேன்.
என்னையே நான் பெருமை நோக்குகின்றேன்.

வஞ்சித்துச் சிதைக்கும்
கடவுளரின் வண்மத்தை
உணர்த்தத் தவறினேன் அவளுக்கு – ஆயினும்
ஒவ்வோர் உயிரிலும் தன்னுயிர் நோக்கும்
உன்மந்த வித்தையைக் கற்பித்தேனே...

(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய மொட்டுகளுக்கான எனது கண்ணீர் அஞ்சலி)