Monday, March 31, 2008

குழந்தைக் கேவல்...

உன் விழி துடைக்கத்
தெரியவில்லை - எனக்கு

நமது இந்த
ஐந்தே வருடப் பழக்கத்தில்
உன்னுள் என்னை பிணைய வைத்தாய்
என்னுள் உன்னை பிணைக்க வைத்தாய்.

நம்மை இப்படி
பிணைய வைத்தது - உன்னுடைய
பாசமா - என்னுடைய
பரிவா - புரியவில்லை எனக்கு.

என்னை வா என்று வாரியணைத்து
உன் நெஞ்சப் பொதிகளிலே
காற்றுக்காய் கடுகளவும் துவாரமில்லாது
கட்டிக் கொள்வாய்.

என்னை தக்கவைத்துக்கொள்ள
தினம் தினம் நீ செய்த
பிரம்ம பிரயத்தனம் இப்போதும் -
புரியவில்லை எனக்கு.

நித்தம் ஒரு பெண்ணின் தழுவல்
தேடும்போதும் கோபம் மிகாமல்
பிரித்திடுவாய் - என்னை சாடாமல்
இருந்திடுவாய்.

தழுவல்களின் தாக்கம்
என்னுள்ளும் நீண்ட நாள் இருக்காது
என்பது தெரிந்துகொண்டதால்
தானோ அப்படி இருந்தாய்.

நம் தெருவில் புகும் ஆடவர்களில்
என்னைத் தவிர மற்றவர்களையும்
தனியே உன்னுடன் அழைத்துச் செல்கிறாய்
எதைத் தேட?

என் பசி போக்க
காலணா காசு வேண்டி
காலணையே கால்மாட்டில்
படுக்க வைத்தாயோ?

ஒரு வேளை நீ
தினமும் தேடுவது இவர்களில்
யார் தான் என்
தந்தை என்றா?

உன் பால் மட்டுமா எனக்குக் கிட்டியது
உன் குருதியும் சேர்த்துத்தானே -
அதனுள்ளே கலந்த - உன்
வியாதியும் கூடத்தானே.

இந்த குத்தூசிக் காயம்தான் - இன்று
விரல்களின் வழியே வழிகின்றது.

அம்மா.
உன் விழி துடைக்கத்
தெரியவில்லை - எனக்கு
என் வலி மறக்கத்
தெரியவில்லை - எனக்கு.