பட்டுத்துணி கொண்டு
நிறுத்திடுவேன் - மஞ்சு
நிறைந்த தென்றலாயினும்.
என்
நெஞ்சில் நிறைவாய்
பயணம் செல்ல உனை மட்டுமே
அனுமதித்திடுவேன்.
சோலைக்கு வெளியிலேயே
தடுத்திடுவேன் - எந்தத்
தேனீயாய் இருந்தாலும்.
என்
மகரந்தத் தேன்குடித்து
மதி மயங்கிக் கிடக்க உனை மட்டுமே
அனுமதித்திடுவேன்.
நாண் அந்தே
போய்விடுவேன் - யார்
எனை மீட்டினாலும்.
என்
நாண் தொட்டுச்
சுரம் மீட்ட உனை மட்டுமே
அனுமதித்திடுவேன்.
துதிக்கை நீட்டி
மண்டியிட ஒப்பேன் - முதுகில்
பயணிக்க கள்ளழகரே விளைந்தாலும்.
என்
உடல் தழுவி ஊர்ந்தேறி
காதோரம் கால்களால் நிரட உனை மட்டுமே
அனுமதித்திடுவேன்.
ஆடைக்கு அப்பாலேயே
அமர்ந்திடுவேன் - முத்துக்
கோர்த்த மாலையாயினும்.
என்
ஆடைக்குள்ளே
ஆர்பரித்துக் கிடக்க உனை மட்டுமே
அனுமதித்திடுவேன்.
கல்லாகவே இருந்தாலும்
முள்ளாகக் குத்திடுவேன் - பட்டது
ராமன் பாதமேயாயினும்.
என்
அங்கம் ஜதியெழுப்ப
நங்கென்று மிதிக்க உனை மட்டுமே
அனுமதித்திடுவேன்.
சுதி மறுத்து
அடுப்பூதக் குழலாவேன் -
எடுத்தூதியது கண்ணனேயாயினும்.
என் மீது ஈர இதழ்பதித்து
எச்சில் காற்றுச் செலுத்த உனை மட்டுமே
அனுமதித்திடுவேன்.
விரிந்து விரிசல் விட்டு
சிதைந்திடுவேன் - சின்னஞ்சிறு
உளி கொண்டே செதுக்கினாலும்.
என்
அங்கம் ரசித்து
அணு அணுவாய் வடிக்க உனை மட்டுமே
அனுமதித்திடுவேன்.
மடி சுரக்க
மறுத்திடுவேன் - காம்புகளை
நெறி கட்டிப் போனாலும்.
என் மனதார மடி திறக்கக்
கை ஊர உனை மட்டுமே
அனுமதித்திடுவேன்.
No comments:
Post a Comment