தெரியாத விசயங்களிலும்
தெரிந்த வரை சொல்லி
அறிந்தவளாய் காட்டிக்கொள்ளும்
மதி நிறைந்தவள் நீ.
தெரிந்த விசயமேயாயினும்
தவறாகப் போய்விடுமோ வென்று
தெரியாததாய்க் காட்டிக்கொள்ளும்
மண்டூகம் நான்.
வேண்டாத வேலையாய்
இந்தத் தெளிவற்ற கண்ணாடிக்கு
பாதரசம் பூச முயன்றாய்.
இறுதி வரை உன் பிம்பம்
பிரதிபளிக்காமல் பிடிவாதமாய் - எனை
வெறும் கண்ணாடித் தடுப்பாகவே
வார்த்துகொண்டேன்.
என் உள்ளங்கைப் பற்றி
ஆயுள் கண்டாய்.
ஆரோக்கியம் கணித்தாய்.
புறங்கை ஓரத்துப் புதனைப் பார்த்து
ஏனோ திடுக்கிட்டும் - உடன்
புன்னகை பூத்து - தாரம்
எனக் கிரண்டென்றாய்.
பெரிய ஆள்ப்பா நீ என்றாய்.
இருதய ரேகை, தன ரேகை,
புதன் ரேகை, புகழ் ரேகை,
சந்தான ரேகை பார்த்தாய்.
சனி வளையம், சந்திர வளையம்
சாலமன் வளையம் பலன்கள் சொல்லி
கண்களில் நீர் கசியச் சத்தமிட்டுச் சிரித்தாய்.
ஏனோ அந்தச் சுக்கிர வளையத் துண்டிப்பை
மட்டும் தவறியும் சொல்ல மறந்தாய்.
இடவலக் கோடுகளில், நீள்வட்ட,
பிறைச்சந்திர, நட்சத்திர வரிகளில்
என் இயக்கம் அறிய முற்பட்டாயே - அன்றேனும்
தயக்கம் கழித்தென்
இதயம் திறந்திருந்தால் - அந்தச்
சுக்கிர வளையத் துண்டிப்பை
பொய்பித்து இருக்கலாமோ.
என் மட்டில்
நீயுன் பெண்மை விதிகளுக்கெல்லாம்
விலக்களித் திருந்தும் - உன் மட்டில்
நானுமென் ஆண்மை
விதிகளுக்கெல்லாம்
விலக்களித் திருந்தேன்.
சகலமும்
புரியா திருந்திருந்ததாய்
காட்டிக்கொண்டேனே – உனை
சடுதியில்
உணரா திருந்திருந்ததாய்
பீற்றிக்கொண்டேனே.
அசுரபல அதிசயமாய்
இன்னு மென்னுயிர்
தாங்கி வாழ்கிறேன்.
No comments:
Post a Comment