முன்பிருந்த முகம் உரைத்த
முன்பனிக் காலமது...
முழுதும் துடைத்துவிட்ட
மதிக்காக
யுகப் பொழுதான நொடிப் பொழுதுகளின்
முதுகை வெறித்து
வானம் பார்த்துப் படுத்திருக்கும்
கிழிந்த கோரைப் பாயின்
மத்தியிலே மல்லாந்திருக்கிறேன்
முகம றைந்த பனி துடைத்து.
கொட்டும் பனியிலும் நிலவினை ரசிப்பதாய்க்
காட்டிக் கொள்ளும் கள்வன் நான் என்பது
நீயும் நானுமான உலகறிந்த ரகசியம்.
சொல்லில் வைக்காது
சொல்லி வைத்தாற் போல்
செம்புக் குடம் தூக்கி
செப்புச்சிலை நீ வருகிறாய்
நீர் இறைத்து வீட்டையே
நிறைக்கும் லட்சியத்தோடு.
அம்மாவின் அதிகாலை சமையலுக்கு பொறுப்போடு
நீர் இறைக்கும் கள்ளி நீ என்பது
நானும் நீயுமான உலகறிந்த ரகசியம்.
சிற்பத்தின் மார்பை வனையும் போது
குழையாது வடித்தல் பொருட்டு
மென்மையாய் நடமிடும் உளி போன்ற
தண்மையாய் பூம்பாதம் தொடுத்து வருகிறாய்.
பனித்துளிகள் முகம றைந்ததாய்
காட்டிக் கொள்ள
மெல்ல முகம் துடைக்கிறேன்.
முகம் துடைத்த என் விரல்கள்
சடுதியில் முகம் திரும்புகின்றன
மீண்டும் முகம றைந்த
நீர்த் துளி துடைக்க.
நிறைந்து குறைந்த செம்பில்
மீண்டும் நீரை நிறைத்துவிடும்
தீர்க்கத்தோடு
உன் விரல்களிடையே விரைந்து வரும்
நீ அள்ளிய நீர் சாகரங்கள்.
குளுமை குமிழ்ந்த பனித் துளிக்குள்
வெம்மை உறையும் நொடிகள் அவை.
முன்பிருந்த முகம் உரைத்த
முன்பனிக் காலமது...
No comments:
Post a Comment